Azolla Pinnata மாற்று உணவுகளில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியது தண்ணீரில் மிதக்கக் கூடிய மிதவை தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது. கால்நடை வளர்ப்பில் அதிக வருமானம் பெறுவதாயின் உணவிற்கான செலவினை குறைப்பது அவசியமாகும்.
Azolla Pinnata (அசோலா) ஓர் அற்புதமான விலங்கு உணவு
Azolla Pinnata (அசோலா) ஓர் அற்புதமான விலங்கு உணவு
கால்நடை வளர்ப்பில் அதிக வருமானம் பெறுவதாயின் உணவிற்கான செலவினை குறைப்பது அவசியமாகும். மாற்று உணவுகளை குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே உணவிற்கான செலவினைக் குறைக்க இயலும். மாற்று உணவுகளில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும் ஆனது Azolla Pinnata (அசோலா) ஆகும். Azolla Pinnata (அசோலா) தண்ணீரில் மிதக்கக் கூடிய மிதவை தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது. இது மிகமிகச் சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டது. Azolla Pinnata (அசோலா) இன் பருமனை அறிந்து கொள்வதற்காக இந்த படத்தை பாருங்கள்.
Azolla Pinnata (அசோலா) வளர்வதற்கான காலநிலை
Azolla Pinnata (அசோலா) வளர்ச்சி வருடம் முழுவதும் இயல்பாக நடக்கக்கூடிய செயல் ஆகும். என்றாலும் அதற்கான சூழ்நிலை நாம் ஏற்படுத்துதல் வேண்டும்.
1.ஒளி
பச்சையம் உணவு தயாரிப்பதற்கு சூரிய ஒளி அவசியம். என்றாலும் நேரடி சூரிய ஒளி பாயாமல் நிழல் வலைக்குள் (Shade Net) ஊடுருவிச் செல்லும் குறைவான வெளிச்சத்தில் நன்கு வளரும். பொதுவாக அசோலாவானது 25-50% வெளிச்சத்தில் நன்கு வளரும். அதிக சூரிய ஒளி அதனுடைய மென்மையான பகுதிக்கு சேதமுண்டாக்கும். அதிக சூரிய ஒளியினால் பாதிக்கப்படும் அசோலா பழுப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறி இறந்துவிடும். மிகவும் இருட்டாக இருந்து போதுமான சூரிய வெளிச்சமில்லையென்றாலும் வளர்ச்சி தடைபட்டு உற்பத்தி குறையும்.
2.தண்ணீர்
அசோலா வளர்ப்பிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. எப்போதும் தண்ணீரின் அளவை நிலையாக வைத்திருக்க வேண்டும். 10 cm உயரத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரின் மட்டம் குறைவாக இருந்தால் வேர்கள் தரையை தொட்டால் அசோலாவில் வளர்ச்சி குறைவடையும்.
3.வெப்ப அளவு
20 c – 30 c அளவு வெப்பநிலை மட்டுமே அசோலாவிற்கு ஏற்றது. 37 c க்கு மேல் வெப்பத்தின் அளவு அதிகரித்தால் அசோலாவின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். 20 c க்கும் குறைவான வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
4.காற்றில் ஈரப்பதம்
காற்றில் ஈரப்பதமானது 85 – 90% இருக்க வேண்டும். காற்றில் ஈரப்பதமானது 60% க்கும் கீழ் வந்துவிட்டால் அசோலா காய்ந்துவிடும்.
5.தண்ணீரின் கார அமில நிலை (PH)
தண்ணீரின் கார அமில நிலை PH 5 -7 வரை இருக்க வேண்டும். அதிகப்படியான அமிலத்தன்மையும், அதிகப்படியான காரத்தன்மையுள்ள தண்ணீரில் அசோலா வளர்க்க இயலாது. உப்பு நீரில் வளராது. அதிக உப்பு இருந்தால் வளர்ச்சி தடைபடும்.
6.காற்று
வேகமாக வீசும் காற்று மறைமுகமாக அசோலா வளர்ச்சிக்கு இடையூறு செய்கின்றது. காற்று வீசும்போது மிதக்கும் அசோலா எதிர்திசையில் சென்று மொத்தமாக ஒதுங்கி அங்கு நெருக்கம் உண்டாகிறது. அதிக நெருக்கடியால் வளர்ச்சி குறைகின்றது. இறப்பும் நேருகின்றது. அதிக வேகமான காற்று அசோலாவில் சிதைவுகளை ஏற்படுத்துகின்றது.
7.சத்துகள்
அசோலா தனக்குத் தேவையான சத்துக்களை தண்ணீரில் இருந்து எடுத்துக் கொள்கின்றது. அசோலா வளர்வதற்கு அனைத்து வகையான சத்துக்களும் தேவைப்பட்டாலும் போஸ்பரஸ் அதிக அளவில் தேவைப்படுகின்றது. தண்ணீரில் கரையும் போஸ்பரஸ் அடிக்கடி கொடுப்பதன் மூலம் அசோலாவின் வளர்ச்சி சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். தண்ணீரில் 20 ppm எனும் அளவிற்கு போஸ்பரஸ் எப்போதும் இருக்க வேண்டும். நுண் ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சியையும் இனப்பெருக்கத்தையும் துரிதப்படுத்தும்.
Azolla Pinnata (அசோலா) இனை எவ்வாறு வளர்ப்பது ?
*குறைந்த ஆழம் உள்ள தேங்கிய தண்ணீரே அசோலா வளர்ப்பதற்கு ஏற்றது. நமக்கு அசோலா தேவைப்படும் இடத்திற்கு அண்மையிலும், அடிக்கடிச் சென்று பார்வையிட வசதியான இடத்திலும், எளிதில் தண்ணீர் கிடைக்கின்ற இடத்தின் அருகாமையிலும் அசோலா வளர்க்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
*நிழலான இடத்தை அல்லது நிழல் வலையை (Shade Net) பயன்படுத்தி செயற்கையாக நிழல் ஏற்படுத்திய இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.
தண்ணீர் ஆவியாவது குறைந்தால் அசோலாவின் வளர்ச்சி நன்கு இருக்கும்.
Azolla Pinnata (அசோலா) உற்பத்திக்கான இடத்தினை தயாரித்தல்
தரைப்பகுதி கூரான கற்கள், முள், வேர் போன்றவைகள் இல்லாமல் நன்கு சமப்படுத்தப்பட வேண்டும். இவைகள் இருந்தால் தண்ணீரை தேக்கி வைக்க விரிக்கும் பொலுத்தீன் கிழிந்து தண்ணீர் கசிந்து வீண் விரயமாகும். நாம் தேர்வு செய்த இடம் மிகச் சரியாக சமமாக மட்டமாக இருப்பது மிக அவசியம். பொடி மணலை தூவி மட்டமான மரப்பலகையை வைத்து இடத்தை சமப்படுத்தி கொள்ள வேண்டும். 12 X 4 அடி அளவுள்ள சற்று தடிமனான பொலுத்தீன் விரித்து அதனைச் சுற்றிலும் இரு வரிசை உயரம் செங்கல் அடுக்கி, தண்ணீர் தேங்கி நிற்கும் அமைப்பை உண்டாக்க வேண்டும். இந்த பொலுத்தீன் தாளில் எந்தத் துளையோ, கிழிசலோ இல்லாமல் இருப்பது மிக முக்கியம். நிலத்தை சமப்படுத்தியபின் அதன்மேல் பழைய சாக்கு, பிளாஸ்டிக் சாக்கு போன்றவற்றைகளை பரப்பி அதன்மேல் பொலுத்தீன் விரித்தால் உண்டாகும் துளைகள் மட்டுப்படுத்தப்படும்.
இந்த அமைப்பில் 2.5 cm உயரத்திற்கு குளத்து வண்டல் மண்ணைப் பொடி செய்து மட்டமாக நிரப்புதல் வேண்டும். 10cm உயரத்திற்கு தண்ணீர் நிரப்புதல் வேண்டும். அத்துடன் 2 Kg பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் நன்றாக கலக்கி பின்னர் அசோலா வளர்ப்பதற்கான தொட்டியினுள் ஊற்றி கலக்கி விடுதல் வேண்டும். இப்போது அசோலா வளர்ப்பதற்கான தொட்டி தயார். இந்த தொட்டியில் 1 Kg அளவிற்கு விதை அசோலாவைத் தூவ வேண்டும். விதை அசோலா என்பது இன்றுமொரு அசோலா வளர்ப்பவரிடமிருந்து வாங்கி வரும் பச்சை, புதிய அசோலாதான்.
அசோலா தொட்டியினுள் வெளி இலைகள் விழுந்துவிடாமலும், புழுதிக்காற்றினால் தூசு படியாமலிருக்கவும் நிழல் வலையால் மேல் பகுதியிலும், நான்குபுறமும் மூடப்பட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
நாம் தெளித்த விதை, காலநிலை, சத்துக்களின் அளவு போன்றவற்றை அனுசரித்து அசோலாவின் வளர்ச்சி காணப்படும். இரண்டு அல்லது மூன்று வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா படர்ந்து இருக்கும். இதனை பிளாஸ்டிக் வலைகளைக் கொண்டு சேகரிக்கலாம். ஒரு 12 X 4 அடி அசோலா தொட்டியிலிருந்து தினசரி 2 Kg அல்லது 3 Kg அசோலாவை அறுவடை செய்யலாம்.
குறிப்பு :-
அசோலா தற்போது பல்வேறு தொழில்நுட்ப அறிவுமிக்க கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்பட்டு கால்நடை உணவில் சேர்க்கப்படுகின்றது.
COMMENTS